மாமனிதர் சிவராமும் அவரின் நிறைவேறாக் கனவும் : சண் தவராஜா

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சிவராம் எனும் ஆளுமை எம்மை விட்டுப் பிரிந்து – மிகச் சரியாகச் சொல்வதானால் எம்மை விட்டுப் பிரிக்கப்பட்டு – பதினொரு வருடங்கள் கடந்து விட்டன. மாமனிதர் சிவராம் அவர்களை தமிழ் மக்கள் இழந்தமை பேரிழப்பே ஆயினும் அதுவொன்றும் பெரிய விடயமல்ல எனச் சொல்லும் அளவிற்கு அதைப் போன்ற பல மடங்கு இழப்புக்களை இந்தப் பதினொரு வருட காலத்தில் சந்தித்து விட்டார்கள். ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் சந்தித்த துயர முடிவு தமிழர் மனங்களில் ஆறா வடுவாக இன்னமும் கனன்று கொண்டிருக்கின்றது.

சிவராம் அவர்களின் படுகொலை நிகழ்த்தப் பட்டமைக்கான காரணம் இரகசியமான ஒரு விடயமல்ல. அவரது ஊடகப் பணி என்பதற்கும் அப்பால் அரசியல் ரீதியாக அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காகவே அவர் இலக்கு வைக்கப்பட்டார். தமிழ்த் தேசிய விடுதலைக்காக ஊடகத்தின் மூலமும் அதற்கு அப்பாலும் அவர் ஆற்றிய பணிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எனும் தமிழர்களின் அரசியல் குரலாகப் பரிணமித்து, 2009 ஆம் ஆண்டின் பின்னான சூழலில் தமிழர்களின் தவிர்க்க முடியாத தலைமையாக அமைந்து விட்டது.

இன்றைய காலகட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது அளவுக்கு அதிகமான விமர்சனங்கள் முன்வைக்கப் பட்டாலும், தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அவர்களின் அபிமானத்தை அதிகம் பெற்ற கட்சியாக அதுவே விளங்குகின்றது. எனினும், எத்தகைய நோக்கத்தோடு சிவராம் அவர்களும் அவரது நண்பர்களும் கூட்டமைப்பை உருவாக்கி, அதன் வளர்ச்சிக்கு ஆதரவாகச் செயற்பட்டார்களோ அத்தகைய நோக்கங்களோடு கூட்டமைப்பு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றதா எனும் ஐயம் கூட்டமைப்பின் உருவாக்கத்தில் முன்னின்று உழைத்தவர்களுக்கே இன்று ஏற்படும் அளவில் கூட்டமைப்பின் ஒரு சில செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

மறுபுறம், சிவராம் அவர்களின் வாரிசுகள் எனத் தம்மைப் பிரகடனப் படுத்திக் கொண்டவர்கள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கின்றது. ஊடகவியலாளர்கள் அனைத்தும் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். அறிவியல் ரீதியாக தம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஊடகப் பணிக்கு அப்பால் சமூகப் பணி, தேசியப் பணி ஆற்ற வேண்டும் என்பதே அவரின் எதிர்பார்ப்பாக இருந்தது.

தமிழர் போராட்டத்தின் தர்க்க நியாயங்களை உலக மாந்தர் ஏற்றுக் கொள்ளும் வகையில், அவர்களுக்கே புரியும் மொழியில் வெளிக் கொணர வேண்டும் என்பதுவும் அவரின் அவாக்களுள் ஒன்று. அத்தோடு, தமிழ் மக்களின் அரசியல் குரலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உண்மையான அக்கறையோடு செயற்படுவதை தமிழ் ஊடகர்கள் உறுதிப் படுத்த வேண்டும். அதற்கான ஆக்கத்தையும் ஊக்கத்தையும் அவர்கள் வழங்க வேண்டும் என்பதுவும் சிவராம் அவர்களின் சிந்தனையாக இருந்தது.

சிவராம் அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப எதுவுமே இன்று தமிழ்ப் பரப்பில் நடப்பதாகத் தெரியவில்லை. மாறாக, ஊடகவியலாளர்களும் அவர்களுக்கெனத் தோற்றுவிக்கப்பட்ட அமைப்புக்களும் ஒருவருக்கு ஒருவர் முரண்பட்ட பாதையில் பயணித்துக் கொண்டிருப்பதையே காண முடிகின்றது.

சிவராமின் சொந்த இடமான மட்டக்களப்பில் தமிழ் ஊடகத்துறையில் இன்று முஸ்லிம் சகோதரர்களே எண்ணிக்கையில் அதிகமாக இருக்கிறார்கள். விரல்விட்டு எண்ணக் கூடிய அளவில் செயற்பட்டுவரும் தமிழ் ஊடகவியலாளர்களுள் அநேகர் அரசாங்க ஊழியர்களாக இருப்பதால் அரச மட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளைத் தட்டிக் கேட்க முடியாதவர்களாக உள்ளனர். இதற்காக இளம் ஊடகவியலாளர்களை மாத்திரம் குற்றம் சாட்ட முடியாது. அந்த மாவட்டத்தில் உள்ள முன்னோடி ஊடகவியலாளர்கள் அவர்களுக்குத் தலைமையேற்க முன்வராமையும் இதற்கான காரணமாகக் கொள்ளப்பட முடியும்.

‘தமிழ் மக்களின் பிரச்சனைகளை சகோதர முஸ்லிம் ஊடகவியலாளர்கள் வெளியே கொண்டுவர வேண்டும்” என அண்மையில் முஸ்லிம் ஊடகவியலாளர் ஒருவர் பகிரங்கமாக வேண்டுகோள் விடுக்கும் அளவிற்கே அந்த மாவட்டத்தில் நிலைமைகள் உள்ளன.

இந்த வேளையில் அந்த மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற வேறு ஒரு சம்பவத்தையும் நினைவுபடுத்துதல் நல்லது. மட்டக்களப்பு அரசாங்க அதிபர் தொடர்பில் ஊடகவியலாளர் நிலவன் எழுதிய கட்டுரையின் எதிரொலியாக அவர் காவல்துறையின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அச்சுறுத்தப் பட்டார். இந்தச் சம்பவத்தைத் தட்டிக் கேட்கவோ, அன்றி அதற்கு எதிராகக் குரல் தரவோ சக ஊடகர்கள் யாரும் முன்வரவில்லை. மாறாக, நிலவனுடனான தமது தொடர்பைத் துண்டித்து அவரைத் தனிமைப்படுத்தி விடவே சக ஊடகர்கள் முயல்வதாக நிலவன் மிகுந்த மனவருத்தத்துடன் பதிவு செய்கிறார்.

சிவராம் அவர்களின் சொந்த மாவட்டத்தின் நிலை இன்று இவ்வாறுதான் இருக்கிறது. இத்தகைய நிலைக்காக வேதனைப் படுவதா அன்றி முறையான அரசியல் தலைமை இல்லா தமிழ் இனத்தின் ஒட்டுமொத்த நிலைமையே இவ்வாறுதானே இருக்கிறது என நினைத்து மனதை ஆற்றிக் கொள்வதா எனப் புரியவில்லை.

இந்தக் கட்டுரையை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் தருணத்தில் ‘சிவராம் அவர்களின் கொலைக்குக் காரணமானவர்களைக் கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டும்” என்ற கோரிக்கையோடு கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்று முடிந்திருக்கும். யாழ்ப்பாணத்தில் சிவாரம் அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வொன்று நடைபெற்றிருக்கும். கிழக்கில் அக்கரைப்பற்று நகரிலும் ஒரு நினைவு நிகழ்வு ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது.

அத்தோடு, அவரது நினைவாக சிலையொன்றை அமைக்க நண்பர்கள் சிலர் தீர்மானித்திருப்பதாகவும் ஒரு கதை உலாவுகிறது. இவற்றையெல்லாம் பார்க்கும் போது ‘இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா?” என்று கேட்கத் தோன்றுகிறது.

‘மரணித்த வீரனுக்கான அஞ்சலி என்பது அவன் விட்டுச் சென்ற கனவை நனவாக்குவதே” என்ற மேற்கோளை எங்கோ வாசித்த ஞாபகம். சிவராமின் வாரிசுகள், நண்பர்கள் என்று தம்மை அழைத்துக் கொள்வோர் நிச்சயமாக இந்த வசனத்தை தம் வாழ்நாளில் ஒருமுறையாவது – இதன் உள்ளடக்கத்தைப் புரிந்து கொண்டு – வாசித்திருப்பார்கள் என நினைக்கிறேன்.

இன்றைய நடப்புக்களைப் பார்க்கும்போது உலகப் போராளியான சே குவேரா எப்படி ஒரு வர்த்தக அடையாளமாக ஒரு சிலரால் பாவிக்கப் படுகின்றாரோ அவ்வாறே சிவராமும் ஒரு வர்த்தக அடையாளமாகப் பாவிக்கப் படுகின்றாரோ என்ற அச்சம் எழுகின்றது. சிவராம் நினைவாக அது செய்கிறேன், இது செய்கிறேன் என்று கூறுபவர்களிடம் மன்றாட்டமாகக் கேட்டுக் கொள்ள விரும்புவது ஒன்றே.

மாமனிதர் சிவராம் அவர்களின் கனவு மெய்ப்பட ஏதாவது செய்வதானால் செய்யுங்கள். அல்லாவிடில் அவரைத் தயவு செய்து ஆலையடிச்சோலை மயானத்தில் – அவரது நிறைவேறாக் கனவுகளோடு – நிம்மதியாக உறங்க விட்டு விடுங்கள்.

கதிரவனுக்காக

-சண் தவராஜா 

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*